மூணாறு குறிப்புகள்

அது வியாழக்கிழமை.
முதன்முறையாக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நெடும்பயணம். மூணாறு செல்லும் ஆர்வத்தில் டிராவல் பைகளுடன் காத்திருந்தார்கள். வாகனமும். ஓட்டுநரும் அவசரப்பட்டுக்கொண்டிருந்தார்.
பத்திரிகையை அச்சுக்கு அனுப்பும் பிஸியான நாள். இழுத்துக்கொண்டே இருந்த வேலை ஒருவழியாக இரவு பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்திருந்தது. அடுத்த நொடியே பயணம் தொடங்கியது.
புதிய தலைமுறை ஆசிரியர் எம்.பி.உதயசூரியன், புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் பெ. கருணாகரன் இணைந்து வழங்கிய மூணாறு சிற்றுலா. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது அடிக்கும் சாரலை அனுபவித்து
வரலாம் என்ற ஆசை.



கிண்டியைத் தொடும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ள புகைப்படக் கலைஞன் கோகுல், மஸ்தான் இருவரும் நடனமாடத் தொடங்கி விட்டார்கள். டான்ஸ் க்ளாஸ் அனுபவம் கொண்டவர்கள். மூணாறில் இருந்து திரும்பும்வரை கோகுல் ஆட்டத்தை நிறுத்தவில்லை. தாம்பரத்தில் ஏறிய கணேசன், கடைசி சீட்டைப் பிடித்துக்கொண்டு அடம்பிடித்தார்.
"புதுப் பாட்டா போடுங்க சார்..." என்று உரிமை முழக்கமிட்டார் சர்ப்பனா. இவள் பாரதி ஹம் செய்தார். எண்பதுகளின் மெலடிகளை அமலன் ரசிக்க, தளவாய்சுந்தரம் புதிய பாடல்களில் மனம் லயித்துக்கொண்டிருந்தார். சில நேரங்களில் தத்துவப் பாடல்கள். ஆனால் ஆலும்மா டோலும்மா பாடலுக்குத்தான் அதிக வாக்குகள்.
சென்னையில் இருந்து மூணாறு வரையில் இடையிடையே ஓட்டுநருக்குத் துணையாக நண்பர் ரவி, மோகன், ஹரி, அருண், கலீல் என பேச்சுத்துணைகள்.
நெடுஞ்சாலைதோறும் தேநீர்க்கடைகளில் எல்லாம் நின்று இளைப்பாறி வத்தலக்குண்டு அருகே ஒரு கிராமத்துக்கு வந்தபோது காலை மணி 6. வேகமாக விரைந்த வாகனங்களில் இரவு கொஞ்சம் மிச்சமிருந்தது. எதிரே மலையழகு.
முகம் கழுவிக்கொள்ள தண்ணீர் கேட்டபோது, நேரமிருந்தால் குளித்துக்கொள்ளுங்கள் என்றார் தேநீர்க்கடை இளைஞர். நல்ல மனம் வாழ்க. சிறுவர்களைப் போல மோகன், மஸ்தான் இருவரும் சாலையின் நடுவே அமர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
பெண்கள் தூக்கம் கண்களில் தேங்கியிருக்க பிரஷ்ஷூம் கையுமாக வண்டியில் இருந்து இறங்கினார்கள். போடியில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்றதும் அமைதியானார்கள். அசெளகரியங்கள் பயணங்களின் எதார்த்தம். தாகம் என்றதும் தண்ணீர் பாட்டிலை நீட்டிய சூர்யாவின் அக்கறைக்கு நன்றி.
சில மணித்துளிகளில் போடிநாயக்கனூர். சிறு நகரத்திற்கே உரிய அமைதி. காலை நேரப் பேருந்துகளில் கூட்டம். ஊருக்குள் ஒரு கல்யாண மண்டபத்தில் காலைநேர இளைப்பாறுதல். எங்களுக்கு முன்பே ஆனி, ஆக்னஸ், வெனிஸ் உள்பட பெண்கள் ஜெட் வேகத்தில் தயாராகியிருந்தார்கள்.
அசுர வேகத்தில் குளித்துவிட்டு அருகிலிருந்த அசோக் பவனில் காலை உணவு. பொங்கல், பஜ்ஜியுடன் ஒரு காபி. ஆடியில் பிஸினஸ் டல் என்றார் ஹோட்டல் முதலாளி. இந்த மாதங்களில் எல்லாம் போடியில் சாரல் அடிக்கும். துளி மழைகூட பெய்யவில்லை என்றவர் குரலில் பெருங்கவலை.



எழுத்தாளர் எஸ். செந்தில்குமாரின் ஊருக்கு வந்துவிட்டு அவரைப் பார்க்காமல் போகமுடியுமா. அவசர சந்திப்பு. வீட்டுக்கு அழைத்தும் செல்லமுடியாத நேரச் சிக்கல்.

போடி வழியாக மூணாறு 76 கிலோ மீட்டர். மூன்று மணி நேரப் பயணம். நண்பகல் 11 மணியாகியிருந்தது. போலீஸ் செக் போஸ்ட் சோதனைக்குப் பிறகு சிற்றுந்து வேகமெடுக்கத் தொடங்கியது. உற்சாகம் களைகட்டியிருந்தது. பனி விழும் மலர்வனம் உன் பார்வை தனிவரம் என்றார் எஸ்பிபி.
வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகள். பசுமையற்ற மலைகளில் மரங்களைப் பார்க்கமுடியவில்லை. மட்டைகள் முறிந்த தென்னைகள். மலைகள் எங்கும் வறட்சியின் நிறம். மேலே பார்த்தால் குறுக்கும் நெடுக்குமாக வெள்ளைக் கோடு கிழித்ததுபோல சாலைகள். பேரழகுதான்.
நடுநடுங்க வைக்கும் உயரத்தில் மலைகளின் சாலைகள். வயிறு கலங்கியது. எட்டிப் பார்த்தால் அதலபாதாளத்தில் ஊர்கள் தெரிந்தன. மலை உச்சியில் ஏறும்போது மச்சானோடு ஏறுங்கள் என்பார்கள். அது உண்மைதான் என்பதை போடியில் இருந்து மலையேறும்போது அந்தப் பதற்றத்தை உணரமுடிந்தது.




சிறு வேகத்தில் வாகனம் சென்றபோது எதிரே அரசுப் பேருந்து. ஒருபக்கமாக ஒதுங்கி வழிவிட வேண்டியிருந்தது. சில இடங்களில் பேருந்துக்காக காத்திருந்த கிராம மக்கள். பாட்டும் ஆட்டமும் நின்று பயணத்தை பயத்துடன் ரசிக்கத் தொடங்கியிருந்தோம். ஒன்றரை மணி நேரத்தில் மெல்லிய சாரல்.
மலைப்பாதைகளில் ஈரக்காற்று. நெடுநெடு உயரத்தில் மரங்கள். மிளகுக்கொடிகள். ஏலக்காய் செடிகள். தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பசுமைவெளி.
வாகனத்தின் ஜன்னல் திறந்து குளிரை சுவாசித்த கணத்தில் மூணாறு வந்துகொண்டிருந்தது மழைத்தூறலாக.

புகைப்படங்கள்: ஹரி, கோகுல்

Comments